தமிழ்நாடு

புளிய மரத்தில் மோதி ஆம்னி மேன் அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும் காட்சி.

ஆம்னி வேன் புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி: 6 பேர் காயம்

Published On 2023-06-20 04:57 GMT   |   Update On 2023-06-20 04:57 GMT
  • திருச்செந்தூர் கோவில் சென்று விட்டு திரும்பும் போது விபரீதம் ஏற்பட்டுள்ளது.
  • விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (41). இவரது மனைவி நந்தினி வயது (34 ) . இவர்களுக்கு மித்ரா ஸ்ரீ (8) என்ற மகளும், சாய் மகிலன் (5) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்ணன் திருச்செந்தூர் செல்வதற்கு வேண்டி ஆம்னி வேனில் தனது மனைவி, மகன், மகள், உறவினர்களான பவானி, அம்மாபேட்டை பாரதி வீதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் மனைவி சாந்தி (59), சதீஷ்குமார் வயது (31), அவரது மனைவி சவுமியா (வயது 27) ஆகியோருடன் கிளம்பி சென்றார்.

இந்நிலையில் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்கு வேண்டி ஆம்னி வேனில் திருச்செந்தூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை கண்ணன் ஒட்டி வந்தார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு 1.20 மணி அளவில் ஆம்னி வேன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கணபதி பாளையம் அருகே உள்ள சின்னம்மாபாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் அவரது மனைவி நந்தினி, மகள் மித்ரா ஸ்ரீ, மகன் மகிலன், உறவினர் சாந்தி, சதீஷ்குமார், சவுமியா ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வந்தது.

விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News