வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டவர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு- மாயமான மேலும் சிலரின் கதி என்ன?
- பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
- மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த அடைக்கலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பின்ராஜ் (வயது 26).
இவர் சாகுபுரம் தனியார் நிறுவனத்தில் பணியாளராக இருந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.
வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது ஏற்கனவே பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் பெருவெள்ளம் ஏற்பட்டு தடைபட்டிருந்தது.
ஆனால் இதையும் கடந்து எப்படியாவது வீடுகளுக்கு சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பெரும்பாலான தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.
இதற்கு ஏற்ப அவர்களில் பலர் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் வழியாக அபாயகரமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை ஒருவர் பின் ஒருவராக கைகோர்த்து சென்றுள்ளனர்.
இதன்படி 15 பேரை கொண்ட குழுவினரோடு பால்பின் ராஜும் அவ்வழியே சென்றுள்ளார். அந்த வரிசையில் இவர் கடைசி ஆளாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் தட்டு தடுமாறி போராடியபடி அக்குழுவினர் வெள்ள நீரோட்டத்தை கடந்து மறுகரையை அடைந்துள்ளனர். ஆனால் அப்போது பால்பின் ராஜை மட்டும் காணவில்லை. இதனால் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரவி ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதனிடையே மீட்பு படையினர் படகு மூலம் அவரை முழுவீச்சில் தேடி வந்தனர். இந்த நிலையில் பால்பின் ராஜ் வெள்ள நீரில் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சிக்கி பிணமாக கிடந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
இதே போல் மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கருதி மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.