ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசிதழில் வெளியீடு
- சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வருகிற அக்டோபர் 17-ல் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது சட்டமாக இயற்றப்பட உள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியாகியுள்ளது. அதன்படி, செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, கண்காணிப்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளட்ட பணிகளை ஆணையம் கையாளும்.
மேலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறைத்தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பாக விளம்பரம் செய்தால் அந்த நிறுவனங்களை நடத்தும் நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.