1974-ம் ஆண்டில் நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?: ப. சிதம்பரம் கேள்வி
- கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்றப்பட்ட தகவலை அண்ணாமலை வெளியிட்டார்.
- பிரதமர் மோடியும் காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார். இதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில ஒருவரான ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-
1974-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?
கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.
மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது
சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு.
இவ்வாறு ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.