பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம்
- நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.
நெல்லை:
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக அவரது பிறந்த நாளுக்கு சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டில் தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவேன். இன்று நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்துள்ளேன்.
எனவே இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளேன்.
விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்கப் படுத்துவதிலும், ஊடகத் துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் தன்னிகரற்று விளங்கிய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.
ஆசிய அளவிலான விளையாட்டு போட்டியில் இந்தியா 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. இத்தகைய சாதனைகளுக்கு அவர் விளையாட்டு துறையில் முன்னுதாரணமாக விளங்கியதே காரணமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ஜனதா நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர் முத்துபலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.