கோவையில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வரையும் பணி தீவிரம்
- கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்ததும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.
- இதுவரை 400 இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் வாக்களிப்பீர் தாமரைக்கு என தாமரை சின்னம் வரையப்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம்:
பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணியை தற்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தொடர்ந்து அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்ததும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் என வினியோகித்து தேர்தல் பரப்புரை செய்வார்கள். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தற்போது பல இடங்களில் அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியை தொடங்கி விட்டன.
அதன்படி கோவை மாவட்டத்திலும் சுவர் விளம்பரங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. தி.மு.கவின் உதய சூரியன் சின்னம், அ.தி.மு.க.வின் இரட்டை இலை, பா.ஜ.கவின் தாமரை, காங்கிரசின் கை உள்பட அனைத்து கட்சிகளின் சின்னங்களும் வரையப்பட்டு வருகின்றன.
சின்னத்துடன் அந்தந்த கட்சிகளின் தலைவர்களின் படங்களும் வரையப்படுகிறது. அத்துடன் தங்கள் அரசு செய்த சாதனைகளையும் வாசகங்களாக எழுதி பிரசாரம் செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
அன்னூர் பேரூராட்சி, வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியத்தில் கடந்த 19-ந் தேதி தாமரைக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், வாக்களிப்பீர் தாமரைக்கு என்னும் வாசகத்துடன் தாமரை சின்னம் வரையும் பணி தொடங்கியது.
அன்னூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, மூக்கனூர், கரியாம்பாளையம், கணேசபுரம், பொன்னே கவுண்டன்புதூர் பகுதிகளில் இதுவரை 400 இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் வாக்களிப்பீர் தாமரைக்கு என தாமரை சின்னம் வரையப்பட்டுள்ளது. அன்னூர் ஒன்றியத்தில் 1000 இடங்களில் தாமரை சின்னத்தை வரைய திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.கவினர் தெரிவித்துள்ளனர்.