தமிழ்நாடு

திருவள்ளூர், அரக்கோணத்துக்கு மின்சார ரெயில்கள் தாமதமாக புறப்படுவதால் பயணிகள் அவதி

Published On 2024-04-06 08:39 GMT   |   Update On 2024-04-06 08:39 GMT
  • திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்படுகின்றன.
  • கோயம்பேட்டுக்கு சென்று பஸ்சில் சென்றால் பயண நேரம் அதிகம் ஆகும் என்பதால் அவர்கள் மின்சார ரெயில்களையே நம்பியுள்ளனர்.

சென்னை:

சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வேலை நிமித்தமாக சென்னைக்கு வருபவர்கள் இந்த ரெயில்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்த பகுதிகளுக்கு சென்ட்ரலில் இருந்து பஸ்கள் இல்லாததால் பயணிகள் மின்சார ரெயில்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. கோயம்பேட்டுக்கு சென்று பஸ்சில் சென்றால் பயண நேரம் அதிகம் ஆகும் என்பதால் அவர்கள் மின்சார ரெயில்களையே நம்பியுள்ளனர்.

ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இதற்கு முன்பு இதுபோல பிரச்சனை ஏற்பட்டபோது ரெயில்வே மேலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புறநகர் விரைவு ரெயில்களை விரைவு வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புறநகர் மின்சார ரெயில் சேவை தாமதமாக காரணமான பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.

Tags:    

Similar News