தமிழ்நாடு

மீனவ கிராமத்தில் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல்- சமாதான கூட்டத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published On 2023-07-28 06:14 GMT   |   Update On 2023-07-28 06:14 GMT
  • கடந்த மாதம் 24-ந்தேதி இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
  • மீனவர்கள் இடையே மீண்டும் மீன்பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

பொன்னேரி:

பழவேற்காடு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் நடுவூர் மாதாகுப்பம் மீனவ கிராமத்தினர் இரு பிரிவுகளாக பிரிந்து பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை ஏரியில் மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தரப்பினர் மீன்பிடிக்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக கடந்த 9 மாதங்களாக வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் என பல்வேறு தரப்பினர் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே கடந்த மாதம் 24-ந்தேதி இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் மீனவர்கள் இடையே மீண்டும் மீன்பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடுவூர் மாதா குப்பத்தில் ஒரு தரப்பை சேர்ந்த 125 மீனவ குடும்பத்தினரை நேற்று மாலை பொன்னேரியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்து இருந்தனர்.

ஆனால் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில் ஆவேசம் அடைந்த மீனவர்கள் வட்டாட்சியர் செல்வக்கு மாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சமாதான கூட்டத்தை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலக முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9 மாதங்களாக மீன்பிடிக்க முடியாமல் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் குற்றம் சாட்டினர். அப்போது நடுவூர் குப்பத்தை சேர்ந்த பல்தாசார் (62), அடேஸ் சகாயம்(50) ஆகியோர் தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசாரும், சமாதான கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் தடுத்து நிறுத்தினர். மேலும் பாத்திமா என்பவரிடம் இருந்து மண்எண்ணை கேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தாசில்தார் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் சின்னத்துரை ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.அடுத்த மாதம்1-ந்தேதி அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மீனவ கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் இரவு 9 மணிவரை பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News