தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சி: குலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்
- இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜ லட்சுமி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
- தசரா குழுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகிறார்கள்.
உடன்குடி:
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
8-ம் நாளான இன்று காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள், மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜ லட்சுமி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
ஏராளமான தசரா குழுவினர் கூட்டம் கூட்டமாக வந்து காப்பு கட்டினர்.
இன்று காலையிலே தசரா குழுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகிறார்கள்.
அனைவரும் 10-ம் நாளான நாளை மறுநாள் (24-ந்தேதி) கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் கடற்கரையில் நடைபெறுகிறது.
தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து அரசு துறையினருடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர்.