சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் அவதி- 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
- வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
- விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.
சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.
அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.
சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.
மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.