ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டுவிழா - பிரதமர் மோடி பங்கேற்பு
- சென்னை- கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- வழியெங்கும் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் திரண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை:
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, ஹெலிகாப்டரில் மூலம் நேப்பியர் பாலம் அருகிலுள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று, சென்னை- கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மாலை 4.25 மணி அளவில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தைச் சென்றடைந்தார். அங்கு ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியும் பங்கேற்றார்.
வழியெங்கும் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.