தமிழ்நாடு

அரசு ஆஸ்பத்திரியில் வீடியோ காலில் பேசி நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது- போலீசில் புகார்

Published On 2022-09-20 10:25 GMT   |   Update On 2022-09-20 10:25 GMT
  • புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.
  • எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி புஷ்பா (வயது 33). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2-வதாக கர்ப்பம் அடைந்தார்.

இவர் சூனாம்பேடு ஊராட்சி, இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புஷ்பா பரிசோதனைக்கு சென்றபோது நேற்று (19-ந்தேதி) அவருக்கு பிரசவ தேதி என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். இதையடுத்து நேற்று காலை புஷ்பா பிரசவத்துக்காக இல்லீடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருக்கு பிரசவ வலி வராததால் அங்கிருந்த டாக்டர்கள் வலி எடுத்தால் ஆஸ்பத்திரிக்கு வருமாறு கூறி திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து புஷ்பாவும் அவருடன் வந்த உறவினர்களும் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். மதியம் 2.30 மணி அளவில் புஷ்பாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் மீண்டும் அழைத்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று தெரிகிறது.

இதையடுத்து அங்கிருந்த நர்சுகள் 3 பேர் புஷ்பாவுக்கு பிரசவம் பார்க்க முயன்றனர். ஆனால் பிரசவத்தில் சிக்கல் இருந்ததால் அவர்களால் பிரசவம் பார்க்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுகுறித்து டாக்டர் ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரவித்தனர். ஆனால் அந்த டாக்டர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. அவர் நர்சுகளிடம், தான் செல்போனில் வீடியோ காலில் தொடர்ந்து பேசுவதாகவும், கூறும்படி செய்தால் சுகப்பிரசவம் பார்த்து விடலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் புஷ்பாவுக்கு நர்சுகள் 3 பேரும் டாக்டர் வீடியோ காலில் கூறியபடி பிரசவம் பார்க்க தொடங்கினர். சிறிது நேரத்தில் குழந்தை தலைகீழாக மாறி முதலில் கால்கள் மட்டும் வெளியே வந்தது. ஆனால் உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் நர்சுகள் திணறினர்.

இதற்கிடையே புஷ்பாவின் உடல் நிலை தொடர்ந்து மோசம் அடைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுபற்றி வீடியோ காலில் இருந்த டாக்டரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து பிரசவ வலியுடன் துடித்த புஷ்பாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது.

இதனால் பதட்டம் அடைந்த நர்சுகள், பிரசவத்தில் புஷ்பாவுக்கு குழந்தை இறந்து பிறந்து விட்டது என்று உறவினர்களிடம் கூறினர். மேலும் புஷ்பாவை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு சென்றுவிட்டனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பாவின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டினர்.

மேலும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து குழந்தையின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

நர்சுகள் பிரசவம் பார்த்ததில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் புஷ்பாவின் உடல்நிலை மோசம் அடைந்து உள்ளது. அவருக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதனை நர்சுகள் கவனிக்காமல் டாக்டர்கள் இல்லாததால் விபரீதமாக அவர்கள் சினிமா பாணியில் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்து உள்ளனர். இதனால் பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோய் உள்ளது. இதுகுறித்து புஷ்பாவின் உறவினர்கள் சூனாம்பேடு போலீஸ நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவுக்கு பிரசவம் பார்த்த நர்சுகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

அலட்சியமாக பிரசவம் பார்த்த நர்சுகள் மற்றும் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்க்க கூறிய டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புஷ்பாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News