விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் எதிரொலி: தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்திய 40 கனரக வாகனங்களுக்கு அபராதம்
- தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
- போலீசார் இரவு விடிய, விடிய சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த கலியனூர் என்ற பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் ஜெகன்பாபு என்பவர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சென்ற ஆம்னி வேன் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த ஒரு பெண், வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆகியோர் படுகாயத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து பற்றி தெரியவந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கலெக்டர் கார்மேகம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவின் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில், சங்ககிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இரவு விடிய, விடிய சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது விதிகளைமீறி சாலை ஓரம் நிறுத்தி இருந்த சுமார் 40 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து தினமும் இது போன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.