தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் கைப்பையில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய ராஜஸ்தான் வாலிபர்- போலீஸ் விசாரணை

Published On 2023-07-22 04:01 GMT   |   Update On 2023-07-22 04:01 GMT
  • தனக்கு தெரியாது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை.
  • வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

கோவை:

கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானம் இயக்கப்படுவதால் கோவை மாவட்டத்தை சுற்றி இருக்க கூடிய அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவை விமான நிலையத்திற்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றன.

நேற்று மதியம் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணிப்பதற்காக பயணிகளும் விமான நிலையத்திற்கு வந்தனர்.

இந்த விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். ஒவ்வொருவராக தனித்தனியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு இருந்த 40 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரின் கைப்பையை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்தது.

இதை பார்த்ததும் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு இருந்த துப்பாக்கி குண்டு மற்றும் பெட்டியை பறிமுதல் செய்தனர். மேலும் துப்பாக்கி குண்டு வைத்திருந்த அந்த வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சிங் (வயது42) என்பதும், காண்டிராக்ட் மற்றும் விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் இவரது சகோதரர் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருவதாகவும், அவரை பார்க்க ராஜஸ்தானில் இருந்து கோவை வந்ததும், அவரை பார்த்து விட்டு கோவை விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப புறப்பட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் துப்பாக்கி குண்டு பையில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்த போது, அது தனக்கு தெரியாது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை என போலீசாரிடம் பதில் அளித்து கொண்டிருந்தார்.

போலீசார் தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது பையில் துப்பாக்கி குண்டு வந்தது எப்படி? இவரே எடுத்து வந்து விட்டு போலீசில் சிக்கியதால் மாற்றி பதில் அளிக்கிறாரா? அல்லது வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இதற்காக விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News