தொண்டர்கள் 40 பேரை போலீசார் அழைத்துச் சென்றதால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் மனு
- நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தபோது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர்.
- அனுமதி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தாலும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஈரோடு சம்பத்நகர், காளைமாட்டு சிலை அருகில், பன்னீர் செல்வம் பார்க் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளீர்களா? என்று கேட்டனர். இந்நிலையில் பிரசாரம் செய்த நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் 40 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இது பற்றி தெரிய வந்ததும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார் அதில் நாங்கள் அனுமதி பெற்று தான் பிரசாரம் செய்கிறோம்.
ஆனால் போலீசார் எங்கள் தொண்டர்களை அனுமதி இல்லை என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி அனுமதி இன்றி பிரசாரம் செய்தால் என்னிடம் அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் அனுமதி வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்தாலும், சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்.