விநாயகர் சிலை ஊர்வலத்தில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி, பட்டாசு வெடிக்க தடை- போலீசார் எச்சரிக்கை
- பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
- விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும்.
பொன்னேரி:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகள் அறிவித்து உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்னேரி பகுதியில் 2 அடிமுதல் 10 அடி உயரம் வரையிலான 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பல வண்ணங்களில் தயார் நிலையில் உள்ளன. பொன்னேரி பகுதியில் மட்டும் 55 விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் அதனை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமை தாங்கினார். அப்போது போலீசார் கூறும்போது, விநாயகர் சிலை களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. விநாயகர் சிலை அமைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்காத தகட்டால் குடில்கள் நிறுவப்பட வேண்டும் . எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகள் 5 நாட்களுக்குள் குறிப்பிட்ட இடத்தில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலையை கரைக்க மினி லாரி டிராக்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி ஆட்டோகளில் எடுத்துச் செல்லக்கூடாது. சிலைகளை எடுத்து செல்லும் இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பழவேற்காடு கடலில் கரைக்க விநாயகர் சிலை கொண்டு செல்லும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றக் கூடாது என்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், கலைத்தோழன் மற்றும் விநாயகர் சிலை குழு அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.