பொன்னேரி- மீஞ்சூரில் மதுகுடித்து விட்டு சாலையில் போதையில் கிடக்கும் குடிமகன்கள்
- குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
- பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், காட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. தற்போது இப்பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இல்லாததால் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகள், பஸ் நிலையம், வணிக வளாகம், சாலை ஓரங்கள், மரத்தடி பகுதிகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மதுகுடிக்கிறார்கள்.
பின்னர் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்தும் போடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் பாட்டில்கள் குவியலாக கிடக்கின்றன. மேலும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சாலை ஓரங்களில் போதையில் படுத்து கிடக்கிறார்கள். அவ்வாறு கிடக்கும் குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிப்பதற்கு இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் சாலையின் அருகே மது குடிக்கிறோம். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்' என்றனர்.