தமிழ்நாடு

கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது

Published On 2023-01-09 06:46 GMT   |   Update On 2023-01-09 06:46 GMT
  • பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
  • புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 19.92 அடிக்கு நிரம்பி உள்ளது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 5 ஏரிகளில் மொத்தம் 10 ஆயிரத்து 911 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.8 சதவீதம் ஆகும்.

வடகிழக்கு பருவமழை மற்றும் 'மாண்டஸ்' புயல் காரணமாக கொட்டிதீர்த்த கனமழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

நீர் இருப்பு தொடர்ந்து அதிகரித்ததால் பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையே ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் முதல் தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கடந்த 30-ந் தேதி முழு கொள்ளளவான 3231 மி.கன.அடியை எட்டியது.

பூண்டி ஏரியில் தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையே புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளிலும் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் அங்கும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கையும் அனுப்பினர்.

ஆனால் தொடர்ந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் 703 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதே போல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் 23 அடியை நெருங்கி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.98 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

ஏரிக்கு 246 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 130 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 19.92 அடிக்கு நிரம்பி உள்ளது. ஏரியில் 2996 மி.கன. அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது (மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி). ஏரிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. குடிநீர் தேவைக்காக 187 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் 831 மி.கன அடியும் (மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி), கண்ணன்கோட்டை தேர்வாய கண்டிகை ஏரியில் 482 மி.கன அடியும் (மொத்த கொள்ளளவு 500 மி.கன. அடி) தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

Tags:    

Similar News