அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3½ கோடி நிலம் நன்கொடையாக வழங்கிய பூரணம் அம்மாள்
- பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று “முதலமைச்சரின் சிறப்பு விருது” வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
- தான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் வழங்கினார்.
மதுரை:
மதுரை கிழக்கு ஒன்றியம், யா.கொடிக்குளம் ஊராட்சியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் அம்மாள். இவர் மதுரை தல்லாகுளத்தில் உள்ள வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது மகள் ஜனனியின் நினைவாக யா.கொடிக்குளம் பகுதி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் உயரிய நோக்கில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ.7 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார். அவரது சேவையை பாராட்டி, பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று "முதலமைச்சரின் சிறப்பு விருது" வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
கடந்த வாரம் மதுரையில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் அதே பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட மேலும் 91 சென்ட் நிலத்தை அவர் தானமாக வழங்கி உள்ளார்.
இதற்கான தான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் நேற்று வழங்கினார். அப்போது, அவர் தனது மகள் ஜனனியின் படத்தை கொண்டு வந்திருந்தார். அந்த படத்தின் முன்பாக வைத்து, பத்திரத்தை முதன்மை கல்வி அதிகாரியிடம் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆயி அம்மாள், கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்பிலான 91 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மக்களும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.