தமிழ்நாடு

காஞ்சிபுரம் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் அர்ச்சகர்கள் மீண்டும் மோதல்: போலீசார்-அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published On 2023-11-19 06:45 GMT   |   Update On 2023-11-19 06:45 GMT
  • வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
  • இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இங்கு பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கோவிலில் ஸ்ரணவ நட்சத்திரத்தை ஒட்டி வேதாந்த தேசிகர், வரதராஜ பெருமாள் கோவில் அருகே எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருவது வழக்கம்.

அன்படி இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள் கோவில் அருகே சன்னதி வீதியில் நடை பெற்றது. அப்போது வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.

அப்போது, தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்க்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகர் முன்பு பிரபந்தம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வடகலை பிரிவினர் பிரபந்தம் பாடத்தொடங்கினர். இதனால் இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதனால் அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் விஷ்ணு காஞ்சி போலீசார் மற்றும் கோவில் செயல் அலுவலர் பூவழகி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இருதரப்பினரையும் சுவாமி ஊர்வலம் முன்பு பாடுவதற்கு போலீசாரும, இந்து சமய அறநிலைத்துறையினரும் அனுமதி அளித்த பின்பு தேசிகர் சுவாமி விதி உலா போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சன்னதி வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பிரபந்தம் பாடுவதில் அர்ச்சகர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News