தமிழ்நாடு

பிரதமர் மோடியின் பேச்சு: நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது- செல்வப்பெருந்தகை எதிர்ப்பு

Published On 2024-08-16 08:36 GMT   |   Update On 2024-08-16 08:36 GMT
  • கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறியது
  • வேற்றுமையில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிற நாட்டு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 11 ஆண்டுகளாக சுதந்திர தின விழாவில் பங்கேற்கிற பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம் என்று கூறி நாட்டுக்கு தேவை மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற விஷமத்தனமான கருத்தை கூறியிருக்கிறார்.

இதை நிறைவேற்றினால் தான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த உரை அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, அரசமைப்புச் சட்டம் தயாரித்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கருத்தியலை தொடர்ந்து புறக்கணிப்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறியது.


ஆனால், அதை நிறைவேற்றுகிற வகையில் பா.ஜ.க.வுக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மையை கொடுக்காமல் பாடம் புகட்டினார்கள். 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி மக்கள் புகட்டிய பாடத்தின் மூலம் தன்னை திருத்திக் கொள்ள அவர் தயாராக இல்லை. குஜராத் முதலமைச்சராக இருந்து எத்தகைய நோக்கத்திற்காக செயல்பட்டாரோ, அதை தேசிய அளவில் நிறைவேற்ற வேண்டுமென்று அவர் முற்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி செயல்படுவதை மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், வேற்றுமையில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிற நாட்டு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News