நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிய கைதி சிக்கினார்
- போலீசார் கார்த்திக்கை நேற்று மதியம் கைது செய்தனர்.
- ஆஸ்பத்திரியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கார்த்திக் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.1,500-ஐ மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றார்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்த பழனிமுருகன் மகன் பரத் என்ற கார்த்திக் (வயது 19) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கார்த்திக்கை நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது கையில் விலங்கு மாட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.
இருந்தபோதும் ஆஸ்பத்திரியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கார்த்திக் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார். இதனால் மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் மேலக்கரையில் உள்ள தனது வீட்டுக்கே சென்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.