ஊர்வலம், போராட்டம் நடத்த தடை: கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
- மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
- வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக கடந்த மாதம் 21-ம் தேதி 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிப்பட்ட 2 பேரையும் அவதூறாக பேசி தாக்கியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை கண்டித்தும் வழக்கை நீக்க கூறியும் இன்று (வியாழக்கிழமை) கோபி செட்டிபாளையம் ஒரு தனியார் கல்யாண மண்டபம் முதல் பஸ் நிலையம் வரை அனைத்து சமுதாய பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபி உட்கோட்ட எல்லை பகுதியில் இன்று ஊர்வலம், பேரணி, ஆர்ப்பாட்டம் நட த்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கோபிசெட்டி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோபி பஸ் நிலையம், பெரியார் சிலை, டவுன் பகுதி, மார்க்கெட் பகுதி, வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பார்வையிட்டார்.
மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுங்கு படுத்தி வருகின்றனர். வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். இதனால் இன்று கோபிசெட்டிபாளையம் பகுதி பரபரப்பாக காட்சியளித்து வருகிறது.