மீண்டும் சொத்து வரி உயர்வு- திமுக அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம்
- மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு.
- சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும்.
சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சொத்து வரி உயர்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு. வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும்.
இதனால் மாணவர்கள், இளைஞர்கள்,வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும். சொத்து வரியா? மக்களின் சொத்தை பறிப்பதற்காக வரியா?" என்று பதிவிட்டுள்ளார்.
அந்த எக்ஸ் பதிவில், லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் கிண்டலடிக்கும் விதமாக புகைப்படம் பகிர்ந்துள்ளார்.