தமிழ்நாடு

புதுச்சேரி முதல்-மந்திரிக்கும், எனக்கும் உள்ளது அண்ணன்-தங்கை பிரச்சினை தான்: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2023-06-28 07:39 GMT   |   Update On 2023-06-28 10:12 GMT
  • பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
  • மத்திய அரசு கொண்டுவர போகும் திட்டங்களால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள்.

நெல்லை:

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


காந்திமதி அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு கோவிலை சுற்றி வந்து நெல்லையப்பர் சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது கோவிலை சுற்றினாலே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் எதுவும் வராது என்று அவர் கூறினார். தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்ற சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் இன்று மக்களோடு மக்களாக முகக்கவசமின்றி சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. அதிலும் நான் மருத்துவராக இருப்பதால் நம் நாட்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதால் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.

பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த பயணத்தின் போது இந்தியாவின் பெருமை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் தலைவர் உலகத் தலைவராக மாறி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதுவரைக்கும் இல்லாத வளர்ச்சியை புதுச்சேரி பார்த்து வருகிறது. 13 வருடம் கழித்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கின்றோம். இதற்கு முன்பை விட ரூ. 2 ஆயிரம் கோடி அதிகமாக கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல பல புதிய திட்டங்களை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நிறைவேற்றி இருப்பதாக பட்டியல் போடுகிறார். இதெல்லாம் ஆளுனரின் ஒத்துழைப்பால்தான் நடக்கிறது.

தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் இன்னும் வாக்குறுதியாகவே உள்ளது. நாங்கள் 65 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உடனடியாக கொடுத்துவிட்டோம். இதெல்லாம் ஆளுனரும், முதல்-மந்திரி இணைந்து பணியாற்றியதால்தான் நடந்தது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நாங்கள் அதை முற்றிலும் புறந்தள்ளவில்லை. அவர்களை நிரந்தரமாக்க முடியாது என்பதால் 3 மாதம், 3 மாதமாக பணி நீட்டிப்பு செய்கிறோம். இன்னும் சொல்லப்போனால் உயர்நீதிமன்றமே நேரடி நியமனத்திற்கு தடை உட்பட சில தடைகளை விதித்து இருக்கிறது. அதை பின்பற்றுவதில் தான் பிரச்சினைகள் வருகிறதே தவிர, இதில் ஆளுனர் அழுத்தம் இல்லை. மற்றுபடி புதுச்சேரி முதல்-மந்திரிக்கும் எனக்கும் உள்ள பிரச்சனையே அண்ணன்-தங்கை பிரச்சினைதான். வேறு எந்த பிரச்சனையும் கிடையாது.

அதிகாரிகள் தரப்பில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வேகம் குறைவாக இருக்கலாம். நான் இதுவரை எந்த கோப்புகளையும் கையெழுத்திடாமல் கிடப்பில் வைக்கவில்லை. கிட்டத்தட்ட 1500 கோப்புகளை கையெழுத்திட்டேன். மார்ச் 31-ந் தேதி முழு நிதிநிலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இரவு 11.30 மணி வரை கையெழுத்திட்டேன். அதனால் தான் பிரதமர் பெஸ்ட் புதுச்சேரி என்றார். நான் அதிகாரிகளை அழைத்து பணிகளை துரிதப்படுத்த பாஸ்ட் புதுச்சேரி என்றேன்.

மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தென் பகுதிக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்வட்ட பாதையை தூத்துக்குடி துறைமுக தேசிய நெடுஞ்சாலையோடு இணைப்பது, தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் என பல திட்டங்கள் வரப்போகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற போகிறார்கள். அதுமட்டுமல்ல தூத்துக்குடி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

நான் தூத்துக்குடியில் போட்டியிட்ட போது புல்லட் ரெயில் விடப்போவதாக பேசினேன். அப்போது சாதாரண ரெயிலே இல்லை புல்லட் ரெயில் எப்படி கொண்டு வருவீர்கள் என்றார்கள். அது கனவு. தென்பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எனது கனவு தான் அது. ஆனால் தற்போது புல்லட் ரெயில் விடுவது தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

Tags:    

Similar News