தமிழ்நாடு

பல் பிடுங்கிய விவகாரம்: நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்

Published On 2023-04-04 08:28 GMT   |   Update On 2023-04-04 08:28 GMT
  • தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் சில போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சில போலீசார் மீது புகார் எழுந்தது.

இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீதான புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே வி.கே.புரம் தனிப்பிரிவு ஏட்டு போக பூமன், கல்லிடைக்குறிச்சி தலைமை காவலர் ராஜ்குமார் ஆகியோரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று முன்தினம் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்

இதற்கிடையே நேற்று இரவு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி சென்னைக்கும், அம்பை சரக உளவுப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் போலீஸ் நிலைய பணிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகர உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிசயராஜ்க்கு, நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே மேலும் சில போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News