சாரல் மழை- குற்றாலம் அருவிகளில் அலைமோதிய கூட்டம்
- கொடுமுடியாறு அணை பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
- கோவில்பட்டி, கடம்பூரிலும் சாரல் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் லேசான சாரல் பெய்தது. நாலுமுக்கு பகுதியில் இதமான காற்று வீசியதோடு சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 4 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்தது. 2 இடங்களிலும் தலா 6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. ஆனாலும் மாலை நேரத்தில் இதமான காற்று வீசியது. கொடு முடியாறு அணை பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2.8 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து மிதமாக இருக்கிறது. ஏற்கனவே அங்கு சாரல் திருவிழா நடப்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் இன்று காலை முதலே குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பரவலாக பெய்தது. அங்கு அதிகபட்சமாக 30 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விளாத்தி குளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கோவில்பட்டி, கடம்பூரிலும் சாரல் மழை பெய்தது. அங்கு தலா 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.