தமிழ்நாடு

உதவி பொறியாளர் சுதா ராஜ்குமார் சக பணியாளர்களுடன் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

வெள்ளப் பகுதிகளில் முகாமிட்டு பணியாற்றும் மின்வாரிய பெண் என்ஜினீயர்: ராஜேஷ் லக்கானி பாராட்டு

Published On 2023-12-21 09:27 GMT   |   Update On 2023-12-21 09:27 GMT
  • உயர் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு அழைத்ததும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் மின் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடக்கின்றன. தூத்துக்குடியில் மின்சார துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றுபவர் சுதா ராஜ்குமார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. கணவரும் வெளியூரில் இருக்கிறார். கடந்த 17-ந்தேதி பெரும்வெள்ளத்தில் சுதாவின் வீடும் தப்பவில்லை. அவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.

இதற்கிடையில் உயர் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு அழைத்ததும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார். அன்று முதல் தொடர்ந்து அங்கேயே பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முகாமிட்டுள்ள மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி சுதாவின் பணியை பாராட்டி உள்ளார்.

தற்போதைய நிலவரம் குறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் மின் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சுற்றுப்பகுதியில் இன்னும் சில கிராமங்களில் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. தண்ணீர் வடிய வடிய இணைப்பு கொடுக்கப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம் நகர பகுதியில் இன்று மாலைக்குள் நிலைமை சீராகி விடும் என்று எதிர்பார்க்கிறோம். 2,500-க்கும் மேற்பட்ட பணியார்கள் அர்ப்பணிப்புடன் களத்தில் நின்று பணியாற்றுகிறார்கள். ஒவ்வொருவரின் பணியும் பாராட்டுக்குரியது என்றார்.

உதவி பொறியாளர் சுதா ராஜ்குமார் கூறியதாவது:-

அண்ணாநகர் 7-வது தெருவில் பக்கிள் ஓடை அருகில் குடியிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி அளவில் வீட்டுக்குள் வெள்ளம் வரத்தொடங்கியது. காலை 7 மணி அளவில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்ததால் உறவினர் வீட்டில் குழந்தைகளை கொண்டு விட்டேன். எல்லா இடங்களிலும் நிலைமை மோசமானதால் பணிக்கு அழைத்தார்கள். வீட்டில் இருந்து நடந்தே மின் நிலையத்துக்கு சென்றேன்.

உயர் அதிகாரிகள் அனைவருமே களத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள் என்றார்.

Tags:    

Similar News