ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகள் திடீர் போராட்டம்
- அரசு ஆஸ்பத்திரி காவலாளிக்கும், நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த காவலாளிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு 200-க்கும் மேற்பட்டோர் காவலாளிகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். வார்டுகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் நோயாளிகளை சந்திக்க கட்டுப்பாடுகளுடன் உறவினர்களை அனுமதித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி காவலாளிக்கும், நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த காவலாளிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் அவர்கள் பணிக்கு சென்றனர்.