தமிழ்நாடு

கேண்டீனில் பஜ்ஜி மீது விளையாடிய எலிகள்: மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

Published On 2023-11-14 05:21 GMT   |   Update On 2023-11-14 07:17 GMT
  • ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி முதல்வர் பாலாஜி கேண்டீனில் ஆய்வு செய்தார்.
  • வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார்.

பெரம்பூர்:

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு வரும் ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் கேண்டீன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கேண்டீனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பஜ்ஜி, வடை, போண்டா சுட்டு விற்பனைக்காக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் எலிகள் சுற்றி திரிந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கேண்டீன் ஊழியர் ஒருவரிடம் கேட்டனர். அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் கண்ணாடி பெட்டியில் விளையாடி கொண்டிருந்த எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, வடை போன்றவற்றை எடுத்து அகற்றினார்.

இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி முதல்வர் பாலாஜி கேண்டீனில் ஆய்வு செய்தார். பின்னர் கேண்டீனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.

வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார். உத்தரவின்பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது

இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களையும் ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags:    

Similar News