தமிழ்நாடு

பள்ளிபாளையம் சந்தைப்பேட்டையில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை காணலாம் - ஆற்றுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் நகராட்சி சார்பில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது

மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு- 130 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது

Published On 2024-08-01 04:56 GMT   |   Update On 2024-08-01 04:56 GMT
  • கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடி தமிழகத்தை நோக்கி வருகிறது.
  • வெள்ளப்பெருக்கால் பள்ளிபாளையம் ஆற்றோரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விட்டது.

சேலம்:

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 50 ஆயிரத்து 15 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 2 லட்சத்து 15 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 1 லட்சத்து 35 ஆயிரத்து 723 கன அடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து 49 ஆயிரத்து 206 கன அடியாகவும் உள்ளது.

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு ஓடி தமிழகத்தை நோக்கி வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் வருகிறது.

ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் காவிரியில் இரு கரைகளையும் மூழ்கடித்தபடி மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 70 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வருகிறது. அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 500 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பார்க்க சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். 16 கண் பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் கண்கொள்ளா காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அதிக அளவில் மக்கள் கூட்டம் நிலவுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் காவிரியில் 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலுர், திருச்சி, தஞ்சை, நாகை கடலூர், மயிலாடுமுறை உள்பட 12 மாவட்ட மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றோர பகுதியில் சந்தப்பேட்டை, நாட்டம்கவுண்டம்புதூர், ஜனதா நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளது.

தற்போது காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பள்ளிபாளையம் ஆற்றோரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விட்டது.

சுமார் 130-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட சதாசிவத்தை, வெப்படை தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் மீட்டனர்.

 

பள்ளிப்பாளையம் நாட்டம்கவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 35). இவரது வீடு ஆற்றங்கரையை ஒட்டி உள்ளது. இவர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஆர்வத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். வெள்ளம் அவரை அடித்து சென்றது. இதை பார்த்த பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் தயார் நிலையில் இருந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் பகுதி மீனவர்கள் பரிசலில் சென்று அவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பாலத்தில் நின்று பொதுமக்கள் யாரும் ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும்-ஈரோடு மாவட்டம் பவானியையும் இணைக்கும் பழைய காவிரி பாலம் வலுவிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பாலத்தில் தற்போது போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News