பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டி: சென்னை அணி 2-வது இடம் பிடித்து சாதனை
- இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்டந்தோறும் குடியரசு தினத்தையொட்டி 14 வயதுக்குட்பட்டோருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, கடந்த மாதம் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் பேட்மிண்டன், டென்னிஸ், கோகோ, கபடி, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
3 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்று அசத்தின. இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தூத்துக்குடி முதலிடத்தை பிடித்தது. சென்னை 2-ம் இடம் பிடித்தது.
சென்னை அணியில் இடம்பிடித்த புழுதிவாக்கத்தை சேர்ந்த வியாசா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆ.ஜோன்ஸ்ராஜ் எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் அசத்தினார். இதுதவிர அந்த பள்ளி மாணவர்கள் 12 பேர் சென்னை அணியில் இடம்பிடித்தனர்.
மாணவர் ஜோன்ஸ் ராஜ், கராத்தே மற்றும் ஜூடோ போன்ற வீர கலைகளில் பயிற்சி பெற்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்தவர் ஆவார். வெற்றிபெற்ற தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகளில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.