தமிழ்நாடு (Tamil Nadu)

மழை பாதிப்பு மீட்பு பணிகள்- சென்னையில் தயார் நிலையில் 18 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள்

Published On 2024-10-14 07:00 GMT   |   Update On 2024-10-14 07:00 GMT
  • ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
  • அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தலைமையகத்தில் 10 பேரிடர் குழுக்கள் தயாராக உள்ளன.

சென்னை:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக மாநில அரசின் வருவாய்த்துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் கழிவுநீரகற்று துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அரசு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.

கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னையில் ஏற்கனவே 3 பேரிடர் குழுக்கள் உள்ள நிலையில் நெல்லையில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 3 குழு, கோவையில் 3 குழு, மேட்டுப்பாளையத்தில் 3 குழு சென்னைக்கு வருவதற்கு தயாராக உள்ளது.

இது தவிர அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தலைமையகத்தில் 10 பேரிடர் குழுக்கள் தயாராக உள்ளன.

இவர்கள் அதிநவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News