தமிழ்நாடு (Tamil Nadu)

விஜய் கட்சி மாநாட்டுக்காக அருகில் கூடுதலாக 50 ஏக்கர் நிலம் தேர்வு

Published On 2024-10-14 06:29 GMT   |   Update On 2024-10-14 06:42 GMT
  • குடிநீர் வசதிகள், மின் விளக்கு வசதிகள், உணவுக்கூடங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி பாதுகாப்புக்காக துபாய் தனியார் சிறப்பு பாதுகாப்பு படை வரவழைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி மாநாட்டுக்கான மேடை அமைப்பு பணிகள் இரவு-பகலாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பந்தலிலேயே தங்கி இருந்து கவனித்து வருகிறார்.

சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையொட்டி குடிநீர் வசதிகள், மின் விளக்கு வசதிகள், உணவுக்கூடங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் பங்கேற்க வருவோர் வசதிக்காக ஏற்கனவே 4 இடங்களில் மிகப்பெரிய வாகனங்கள் நிறுத்தும் இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று 27 ஏக்கர், 6½ ஏக்கர், 3½ ஏக்கர், 3 ஏக்கர் என இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகமாவதை தொடர்ந்து வாகனங்கள் நிறுத்துவதற்காக சுமார் 25 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை கூடுதலாக மேலும் ஒரு இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மின் விளக்கு வசதி 3 ஆயிரம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டுக்கான மின்சார வசதிகள் அனைத்தும் ஜெனரேட்டர் மூலம் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களின் பாதுகாப்புக்காக மாநாடு மைதானம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிணறுகள் இரும்பு தகடுகளால் மூடப்பட்டுள்ளது.

மாநாடு பாதுகாப்பு வசதி, வரவேற்பு மற்றும் உணவு, வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பணிகளுக்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி பாதுகாப்புக்காக துபாய் தனியார் சிறப்பு பாதுகாப்பு படை வரவழைக்கப்பட்டுள்ளது. மாநாடு பணிகளில் எந்தவித குளறுபடிகளோ, அசம்பாவிதங்களோ நடைபெறாத வண்ணம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள கட்சி தலைவர் விஜய் நிர்வாகிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மாநாடு தேதி நெருங்கும் நிலையில் பந்தல் மற்றும் அனைத்து பணிகளும் விரைவில் முழுமை பெற இருக்கிறது. மாநாடுக்கு 12 நாட்களே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் களை கட்டி உள்ளது.

Tags:    

Similar News