தமிழ்நாடு

அப்பர் கோதையாறு பகுதியில் சுற்றி வரும் அரிசி கொம்பன் யானையை படத்தில் காணலாம்.

அரிசி கொம்பன் யானை ஆரோக்கியத்துடன் தனது வாழ்விடத்தில் வசதியாக உள்ளது- வனத்துறை அதிகாரி தகவல்

Published On 2023-06-26 05:28 GMT   |   Update On 2023-06-26 05:28 GMT
  • தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது.
  • அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர்கோவில்:

கேரளா சின்னக்கானல் பகுதியிலும், தேனி மாவட்டம் குமுளி பகுதியிலும் அரிசி கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் யானையை பிடித்தனர்.

பின்னர் அரிசி கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டு விட்டனர். அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை அந்த பகுதியிலேயே சுற்றித்திரிகிறது. முத்துக்குளி வயல் பகுதியில் இயற்கை உணவு அதிகம் கிடைத்து வரும் நிலையில் அங்கேயே யானை உள்ளது. விடப்பட்ட இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது.

யானை கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு நெல்லை, குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்களும், வனத் துறை ஊழியர்களும் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

இதற்கு வனத்துறையினர் யானையின் உடல் மாற்றத்திற்கு காரணம் அதனுடைய உணவு பழக்க வழக்கமே என்று தெரிவித்திருந்தனர். அரிசி கொம்பன் யானை சுற்றி வரும் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் குட்டி யானை உட்பட 3 யானைகள் உள்ளது. அந்த யானையுடன் அரிசி கொம்பன் யானையை இணைக்கவும் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

அரிசி கொம்பன் யானை மிகவும் ஆரோக்கியத்துடன் தனது வாழ்விடத்தில் வசதியாக உள்ளதாக மாநில வனத்துறை செயலாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து களக்காடு சரணாலயத்தின் துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது. கடந்த வாரங்களில் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் தனது உணவிற்காக அரிசி மற்றும் பயிர்களை சாப்பிட்டு வந்த யானையானது காட்டுப் பகுதியில் விடப்பட்ட பின்பு 20 நாட்களாக மூணாறு வனப்பகுதி போன்ற வாழ்விடம் களக்காட்டிலும் உள்ளதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ள இயற்கையான உணவை எடுத்துக் கொண்டும் சுதந்திரமாக உலாவியும் வருகிறது.

அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். களக்காடு சூழலுக்கு ஏற்றவாறு யானையை பழக்கப்படுத்த வனத்துறை மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அரிசி கொம்பன் யானையை தினந்தோறும் கண்காணித்து வரும் களப் பணியாளர்கள் யானை நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News