தமிழ்நாடு

சாலையோரத்தில் பொதுமக்களை பயமுறுத்தும் விளம்பர பலகைகள்- ஆபத்துகள் ஏற்படும் முன் அகற்றப்படுமா?

Published On 2023-06-21 09:32 GMT   |   Update On 2023-06-21 09:32 GMT
  • சென்னை மாநகரம் முழுவதும், சாலையோர பகுதிகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் அதிகரித்து வருகின்றன.
  • அத்துமீறி விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மற்றும் கோவையில் பேனர்கள் விழுந்து 4 பேர் பலியானார்கள். இதை தடுப்பதற்காக பேனர்கள் வைக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் அபராதம் முதல் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வரை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

மேலும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வைத்தாலும் கட்டிட உரிமையாளரே பொறுப்பு என்பது விதி.

கடுமையான சட்டங்கள் வந்தும் கூட பேனர் வைக்கும் கலாச்சாரம் கட்டுப்படவில்லை. தலைநகர் சென்னையிலேயே பிரதான சாலைகளில் ஏராளமான பேனர்கள் வரிசை கட்டி வைக்கப்பட்டுள்ளன.

அண்ணா சாலை, தேனாம்பேட்டை சிக்னல் பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்களின் மீது ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் மிக முக்கிய சாலையாக, அண்ணா சாலை திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த சாலையை பல லட்சம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் தற்போது திடீரென விளம்பர பலகைகள், 'பேனர்'கள் வைக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை ஏராளமான விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், பெரும்பாலான விளம்பர பலகைகள், பல மாதங்களாக உள்ளன. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அண்ணா மேம்பாலம் அருகில் பல விளம்பர பலகைகள், மாதக்கணக்கில் வைக்கப்பட்டு உள்ளன.

முக்கிய சாலை பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகைகள் மாநகராட்சியின் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டு உள்ளதா? அல்லது தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டு உள்ளதா என சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ள இந்த விளம்பர பலகைகளை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சென்னை மாநகரம் முழுவதும், சாலையோர பகுதிகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் அதிகரித்து வருகின்றன. விளம்பர பலகைகள், பேனர்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகிக்கொண்டு செல்கிறது. சென்னை மாநகரின் முக்கிய பகுதியான அண்ணா சாலையில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பலகையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பலத்த காற்றில் திடீரென விளம்பர பலகைகள் சரிந்து விழுந்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து உருவாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலித்து, அனுமதி பெறாத விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அத்துமீறி விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News