கூட்டுறவு வங்கியில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி: 4 கிலோ தங்க நகைகள் தப்பியது
- சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
- இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த சுமார் 4 கிலோ தங்க நகைகள் தப்பியது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து வேளாண் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதுடன், நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு தங்க நகைகள் ஈட்டின் பேரில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வேளாண் கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் மர்ம நபர்கள் சி.சி.டி.வி. கேமராக்களை துண்டித்தும் கதவினை உடைக்க முயற்சித்தபோது எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதுகுறித்த எச்சரிக்கை தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றதை அடுத்து விரைந்து வந்த கூட்டுறவுச் செயலாளர் வந்து பார்த்தபோது கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த சுமார் 4 கிலோ தங்க நகைகள் தப்பியது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.