தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட மண் எண்ணெய் கேன்களுடன் கைது செய்யப்பட்ட 2 பேரையும், அவர்களை பிடித்த கடலோர போலீசாரையும் காணலாம்

இலங்கைக்கு கடத்திய ரூ.9 லட்சம் மதிப்பிலான மண் எண்ணெய், பீடி இலைகள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2023-07-26 07:38 GMT   |   Update On 2023-07-26 07:39 GMT
  • வள்ளத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக 600 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் 30 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது.
  • கூடங்குளம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் சரகத்திற்குட்பட்ட கடல் பகுதியில் கடலோரபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாரன், சுரேத்திரகுமார், ஏட்டுகள் முருகன், ரவிசந்திரன், ஐசக் சாம், போலீஸ்காரர்கள் ஜெகதீஸ், கிருஷ்ணகுமார் ஆகியோர் ரோந்து சென்றனர்.

உவரி வேளாங்கண்ணி மாதா கோவில் தூண்டில் வளைவு அருகே சென்றபோது, பதிவு எண் இல்லாத பைபர் வள்ளம் நிற்பதை பார்த்தனர். அதில் தூத்துக்குடி வடக்கு கடற்கரை அண்ணா காலனியை சேர்ந்த பிரவின் (வயது 38), தெற்கு பீச் ரோடு இனிகோ நகரைச் சேர்ந்த கிஷோர் (34) ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.

இதனை தொடர்ந்து வள்ளத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக 600 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் 30 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தியபோது, அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் ஆகும். அதனை கைப்பற்றிய போலீசார், பிரவிண் மற்றும் கிசோரை கைது செய்தனர்.

அவர்களோடு வந்த நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் பகுதியை சேர்ந்த துளசிமணி தப்பிச்சென்று விட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க கன்னியாகுமரி கடலோர பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கூடங்குளம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News