தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் நாளை சசிகலா சுற்றுப்பயணம்

Published On 2022-09-20 04:52 GMT   |   Update On 2022-09-20 04:52 GMT
  • எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து பயணிக்க உள்ளார்.
  • கடந்த 12, 13-ந்தேதிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சென்னை:

சசிகலா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார். கடந்த ஜூலை மாதம் திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளிலும், கடந்த 12, 13-ந்தேதிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் சசிகலா கும்மிடிப்பூண்டி தொகுதியில் நாளை (புதன்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து சசிகலாவின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண் இனத்தின் பாதுகாப்பை பேணி காத்திடவும் சசிகலா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து பயணிக்க உள்ளார். நாளை (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்கு சசிகலா தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்படுகிறார்.

கோயம்பேடு பாலம், மாதவரம் ரவுண்டானா, செங்குன்றம், பாடியநல்லூர் வழியாக கன்னிகைபேர் சென்றடைந்து அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News