குமரியில் கடல் சீற்றம்- கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
- கடல் சீற்றமாக காணப்பட்டதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 7-ந்தேதி வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரி மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி வரை அனைத்து கடற்கரை கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்படும். காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாகவும், பங்கு தந்தைகள் மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று மாலை கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கணபதிபுரம் லெழூர் கடற்கரையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்.
போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். முட்டம், தேங்காய்பட்டினம் உட்பட கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாகவே இருந்தது. ராட்சத அலைகள் எழும்பியது.
கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது. கடல் சீற்றமாக காணப்பட்ட தையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் வள்ளல்கள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குளச்சல், சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.