471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்..! செந்தில் பாலாஜி உருக்கம்
- செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
- முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
471 நாட்கள் சிறையில் இருந்து ஜாமினில் நேற்று வெளியே வந்த செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, செந்தில் பாலாஜி சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்தும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் செந்தில் பாலாஜி உருக்கமாக பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..
தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை...
என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.." என குறிப்பிட்டுள்ளார்.