தமிழ்நாடு

ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்.

சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

Published On 2023-10-01 10:30 GMT   |   Update On 2023-10-01 10:30 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது.
  • 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 57.50 அடியாகவும் உயர்ந்தது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் இருந்து இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் பெய்த மழையால் நேற்று அதன் நீர்மட்டம் 73.75 அடியாக இருந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு 2,906 கனஅடியில் இருந்து 6,206 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 80.50 அடியானது. அங்கு 26 மில்லிமீட்டர் மழை பெய்தது.

சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. பலத்த மழையினால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அந்த அணையின் நீர் இருப்பு 87.20 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 104.07 அடியானது. இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 17 அடி அதிகரித்தது.

இதேபோல் மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. அந்த அணை நீர்மட்டம் 46.65 அடியாக உள்ளது. 52.50 அடியாக இருந்த கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பு 20 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும் உள்ளது.

மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சில மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. களக்காட்டில் 11.20 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாஞ்சோலை வனப்பகுதி யில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊத்து எஸ்டேட்டில் நேற்று முழுவதும் நள்ளிரவு வரையிலும் பலத்த மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 10.5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 90 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாஞ்சோலையில் 47 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

நேற்று இரவு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து அருவிக்கரைகளில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குண்டாறு அணை பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழியும் நிலையில், இன்று காலை அணைக்கு வரும் 110 கனஅடி நீரும் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 99 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 5 அடி அதிகரித்து 103.50 அடியாக உள்ளது.

85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 57.50 அடியாகவும் உயர்ந்தது. அந்த அணை பகுதிகளில் முறையே 12 மற்றும் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் பலத்த மழை கொட்டியது. செங்கோட்டையில் 40.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ஆய்குடியில் 26 மில்லிமீட்டரும், தென்காசியில் 20 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News