இருளர் இன பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கைதான கிராம நிர்வாக அலுவலர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு
- பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
- ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜ், அப் பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் போலீசார் பெண்களுக்கு பாலியல்எதிரான வன்கொடுமை மற்றும் சாதியை பற்றி பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.