தமிழ்நாடு

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

Published On 2024-05-13 04:57 GMT   |   Update On 2024-05-13 04:57 GMT
  • முதல் மற்றும் 2-வது அணு உலைகள் பராமரிப்பு காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படும்.
  • மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக மக்கள் அச்சம்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் 70 சதவீதம் நடந்து முடிந்துவிட்டது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் பராமரிப்பு காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படும். அதன்படி 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை நிறுத்தப்பட்டது.

இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைய 60 நாட்கள் வரை ஆகலாம். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்திற்கு தினமும் கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் முதலாவது அணு உலை மூலமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டிற்கும் அதிகமாக தேவைப்படும் சூழ்நிலையில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 562 மெகா வாட் மின் உற்பத்தி பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படுவதால் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News