விருத்தாச்சலம் போலீஸ் நிலையம் முன்பு மனைவியை நினைத்து மைக் செட்டில் பாட்டு பாடி கவனம் ஈர்த்த பாடகர்
- பழனியம்மாள் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
- மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அமர்ந்து பாட்டு பாடி போலீசாரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடல் பாடினார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல். இவரது மனைவி பழனியம்மாள்.
பழனியம்மாள் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை பல இடங்களில் தேடி கிடைக்காத நிலையில் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பழனிவேல் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் 5 ஆண்டுகள் ஆகியும் அவரது மனைவியை கண்டுபிடித்து தரவில்லை என சோகத்தில் ஆழ்ந்த பழனிவேல் விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அமர்ந்து பாட்டு பாடி போலீசாரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடல் பாடினார்.
இதுபற்றி பழனிவேலிடம் கேட்டபோது, தான் ஒரு மைக் ஒரு ஸ்பீக்கர் வைத்துக்கொண்டு பாட்டு பாடும் தொழில் செய்வதாகவும், மாதம் ரூ.40ஆயிரம் சம்பாதிப்பதாகவும் தனது மனைவி 5 ஆண்டுகளாக காணவில்லை எனவும், மனைவியை கண்டுபிடித்து கொடுக்குமாறு விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தபோது அங்கிருந்த போலீசார் ஒருவர் அதிகாரிகள் யாரும் இல்லை பிறகு வாருங்கள் என கூறி என்னை அனுப்பிவிட்டனர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு தனது மனைவியை நினைத்து உருகி பாடுவதாகவும் கூறினார்.
இளங்காற்று வீசுதே, என் ஜீவன் பாடுது, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு உள்ளிட்ட சோக பாடல்களை போலீஸ் நிலையம் முன்பு அவர் பாடியதைக் கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.