தமிழ்நாடு

பல்லடத்தில் இருந்து கேரளாவுக்கு இரவு நேரங்களில் தொடரும் கனிம வளங்கள் கடத்தல்- பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு

Published On 2023-06-01 04:24 GMT   |   Update On 2023-06-01 04:24 GMT
  • கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • லாரிகளில் அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க ஏற்கனவே லாரிகளை சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள், விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சாலைமறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விதிமுறைகளின் படி ஜல்லிக்கற்கள் மற்றும் எம். சாண்ட் கொண்டு செல்லப்பட்டு வந்தது.

சம்பவத்தன்று இரவு கோடாங்கிபாளையத்தில் அதிக அளவில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த கேரள மாநில லாரியை அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறைப்பி டித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரிக்கு ரூ.71 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

லாரிகளில் அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க ஏற்கனவே லாரிகளை சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம். இதை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்ததையடுத்து, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் சில நாட்கள் கேரள லாரிகள் வராமல் இருந்தன. தற்போது இரவு நேரங்களில் மீண்டும் வருவதாக தெரிகிறது. இது மேலும் தொடர்ந்தால் பொதுமக்கள் மீண்டும் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News