கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதால் குற்றாலத்தில் சீசன் அறிகுறி
- செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது.
- நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
தென்காசி:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
அதாவது ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி சீசன் களைகட்டும். இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கிவிட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை பொழிய தொடங்கியது.
செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. அங்கு இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. வார விடுமுறை நாள் என்பதால் அதில் தற்போது சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ தொடங்கியுள்ளனர். மெயின் அருவி முழுவதும் பாறையாக காட்சியளித்த நிலையில் அதில் சற்று தண்ணீர் வழிய தொடங்கி உள்ளதால் எப்பொழுது தண்ணீர் அதிகரிக்கும் ஆனந்த குளியல் போடலாம் என சுற்றுலா பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.