தமிழ்நாடு

அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

தென்மேற்கு பருவமழை முன்எச்சரிக்கை- நீலகிரியில் மண்சரிவு ஏற்படும் இடங்கள் கண்காணிப்பு

Published On 2022-06-23 04:32 GMT   |   Update On 2022-06-23 04:32 GMT
  • நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது.
  • நீலகிரி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற 3,329 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது. இதுதொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டு உள்ள 283 பகுதிகளுக்கும் 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் 6 வட்டங்களுக்கு துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல இயற்கை பேரிடர்களினால் மரம் சாலைகளில் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த தேவையான பவர்சா உள்ளிட்ட எந்திரங்களும், ஜே.சி.பி. ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

அபாயகரமான மரங்களை கண்டறிந்து அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற 3,329 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News