தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனார் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-09-27 06:20 GMT   |   Update On 2024-09-27 06:20 GMT
  • சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • சி.பா.ஆதித்தனாருக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை:

"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

எளிய மக்களுக்கு உலக நடப்புகளைக் கொண்டு சென்று தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவரும், கழக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்து அளப்பரிய சேவை புரிந்தவருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News