தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடையில் விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்

Published On 2023-04-29 08:14 GMT   |   Update On 2023-04-29 08:14 GMT
  • மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பறவைகளுக்கு கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வண்டலூர்:

இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் சூட்டைத் தணிக்க கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் அல்வா போன்று விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள் பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி ஜன்னல் கோணி கட்டப்பட்டு அவைகளுக்கும் கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டாமிருகத்திற்கு ஷவர் குளியலுடன் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் அமைத்துள்ளனர்.

அதேபோல் நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர்.

அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப் பொலிவுடன் திறக்கப்பட்ட உணவகங்கள், நிழற்குடைகள் என்று பார்வையாளர்களுக்கும் கோடை காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளை உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.

Tags:    

Similar News